டெல்லி: 1948ம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி டெல்லி பிர்லா ஹவுஸ் பகுதியில் மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சாவர்க்கரின் பெயரும் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் இருந்து, சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். இதற்கு காரணம் யார் என்பது குறித்து விவரித்துள்ளார் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம்.
டெல்லி பொது நூலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, வீர சாவர்க்கர் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம், "நாட்டு மக்களுக்காக தனது ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறையே சாவர்க்கரின் தியாகம், பலத்தை எடுத்துரைக்கும். ஆனால் சாவர்க்கர் மறைந்த பிறகும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கில், சாவர்க்கரின் பெயரும் சேர்க்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சாவர்க்கர் தரப்பு வழக்கறிஞரை, சட்டமேதை அம்பேத்கர் அழைத்து ஆலோசனை நடத்தினார். சில குறிப்புகளை அவரிடம் வழங்கி அதன் அடிப்படையில் வாதாடுமாறு கேட்டுக் கொண்டார். காந்தி மறைந்த ஓராண்டுக்கு பிறகு, கொலை வழக்கில் சாவர்க்கருக்கு தொடர்பு இல்லை என கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால் யாரும் இதைப்பற்றி பேசவில்லை.
காந்தியை கொல்ல கோட்சேவை தூண்டியது சாவர்க்கர் தான் என எதிர்க் கட்சியினர் கூறுவது பொய். சிறையில் இருந்த போது பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர் தான் சாவர்க்கர் என எதிர்க் கட்சியினர் கூறி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனர். உண்மை என்னவென்றால், அந்த விண்ணப்ப படிவத்தின் வடிவம் அப்படி இருந்து இருக்கிறது. ஆனால் பிரிட்டிஷ்காரர்களிடம் சாவர்க்கர் மண்டியிட்டதாக சிலர் பொய்யான கருத்துக்களை பரப்புகின்றனர். ஜவஹர்லால் நேருவை விடுவிக்க பிரிட்டிஷ் அரசுக்கு மோதிலால் நேரு எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது?.
நமது நாடு சுதந்திரம் அடைந்த போது, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் ஒரு பக்கம் வியப்பும், கவலையும் அடைந்தனர். சொந்த ஊரில் சொத்துக்கள் எல்லாம் பறிபோன நிலையில் மீண்டும் அங்கே எப்படி செல்வது என எண்ணினர். அப்போது அவர்களுக்கு சாவர்க்கர் உதவி செய்தார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பல மொழி பேசும் மக்கள் வந்திருந்ததால், அவர்களுக்குள் பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது அனைத்து சிறை வாசிகளுக்கும் சாவர்க்கர் இந்தி கற்பித்தார். பின்னர் சிறைவாசிகள் அங்கேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், புதிய சமூகத்தை உருவாக்க வேண்டும் எனவும் சாவர்க்கர் வலியுறுத்தினார்" என்று மத்திய சட்டத்துறை அர்ஜூன் ராம் கூறினார்.
இதையும் படிங்க: கலந்துரையாடல் கூட்டத்தில் சலசலப்பு - ஆட்சியரை நோக்கி மைக்கை வீசிய முதல்வர் கெலாட்!