இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து - அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.
சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். “30 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டது தான் புதுச்சேரி சட்டப்பேரவை” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் - சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் 33ஆக உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பா.ஜ.க.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.