தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டில் அதிக தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
இந்நிலையில், விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "விராலிமலை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, கன்ட்ரோல் யூனிட்களின் எண்ணிக்கையில் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த கோரிக்கைவிடுத்தோம். மீதமுள்ள சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அந்தக் குறிப்பிட்ட, கன்ட்ரோல் யூனிட்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த தேர்தல் நடத்தும் அலுவலர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் 3,000 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்த நிலையில், திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கு பதிவான 4,000 வாக்குகள் அவருக்கு பதிவானது போல் எண்ணப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டை அனுமதித்தால், தேர்தல் முடிவுகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கைவிடுத்துள்ளோம். புதிய தேர்தல் நடத்தும் அலுவலரின் மூலம் சட்டப்படி வாக்குகளை எண்ண வேண்டும்.
இதன்மூலமாகவே, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டு, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.