தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வி.பி.சிங் சிலையை திறந்து வைக்கும் ஸ்டாலின்... தேசிய அரசியலுக்கு அடித்தளமா?

V.P Singh statue in Chennai: நாடு தழுவிய திமுகவின் அரசியல் யுக்தியை பிரதிபலிக்கும் நிகழ்வாக நடைபெறவுள்ள வி.பி சிங்கின் சிலை திறப்பு விழா குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தில் வி.பி.சிங் சிலை: தேசிய அரசியலில் திமுக நுழையும் யுக்தியா?
தமிழகத்தில் வி.பி.சிங் சிலை: தேசிய அரசியலில் திமுக நுழையும் யுக்தியா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 7:08 PM IST

டெல்லி: 1989-90ல் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்தியது காரணமாக அமைந்தது. அன்றிலிருந்து 30 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இன்று தேசிய அரசியலில் மீண்டும் உச்சரிக்கப்படும் பெயராகியிருக்கிறது வி.பி.சிங்கின் பெயர். அதற்கான காரணம் தமிழகத்திலிருந்து பிறந்திருக்கிறது. ஆம், முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற நவம்பர் 27ம் தேதி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கின் உருவ சிலையை திறந்து வைக்க உள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது, இந்நேரத்தில் வி.பி சிங்கின் உருவ சிலையை திமுக திறப்பதில், பல அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும், இதன் பின்னணி குறித்து அலசி ஆராய்கிறது இந்த தொகுப்பு. சிலைத் திறப்பு விழாவின் முக்கிய விருந்தினர்களில் ஒருவரான வி.பி.சிங்கின் மகன் அஜய் சிங், ஈடிவி பாரத் டெல்லி செய்தியாளர் ராகேஷ் திரிப்பாதியுடன் கலந்துரையாடினார்.

இதில் பேசிய அஜய் சிங், “ எனது தந்தையின் உருவ சிலை திறக்கும் விழாவிற்கான அழைப்பிதழை பெற்றேன். நான் அழைப்பை ஏற்று எனது குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறேன். இதில் உள்ள அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரெல்லாம் அழைக்கப்பட்டார்கள், அழைக்கப்படவில்லை என்பது எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை” என தெரிவித்தார்.

வி.பி.சிங் என்பவர் வட இந்திய அரசியல் முகம் தானா? அவர் சிலையை ஏன் தமிழ்நாட்டில் திறக்க வேண்டும், என்ற கேள்விகளுடன் டெல்லியைச் சேர்ந்த பேராசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான சஞ்சய்குமாரை அணுகினோம், வி.பி.சிங்கின் சிலை திறப்பின் மூலம் தேசிய அளவிலான அந்தஸ்தை திமுக பெறும் என்கிறார் சஞ்சய்குமார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சமூகநீதி என்பது விவாதத்துக்குரிய முக்கிய பொருளாக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனையும் முன்னிலையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் இதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றன. வரும் தேர்தலில் சமூகநீதியே கருப்பொருளாக மாறும் பட்சத்தில் தேசிய அளவில், திமுகவுக்கு பல்வேறு சாதகமான அம்சங்கள் கிடைக்கும் என்கிறார் சஞ்சய் குமார்.

இது குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், “ என்ன தான் மாநில அளவில் திமுகவுக்கு அரசியல் பலம் இருந்தாலும் வட இந்தியா உட்பட, தேசம் முழுமைக்கும் செல்வாக்கை பெரும் ஒரு முயற்சி தான் இதில் வெளிப்படுகிறது. சுருக்கமாக சொன்னால், தேசிய அளவிலான அரசியலில் தனக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என திமுக கருதுகிறது” என்றார்.

காங்கிரஸில் இருந்து வி.பி சிங் விலகி சென்று ஜனதா தளம் அமைத்தாலும், 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், கசப்பான இந்த வரலாற்றை காங்கிரஸ் மறந்துதான் ஆக வேண்டும். இதனை மண்டலின் மறுபிறப்பு என குறிப்பிடுகிறார், வி.பி.சிங்கின் மகன் அஜய், “1990-ல் மண்டல் கமிஷன் அறிவிக்கப்பட்டபோது, ​​அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, அதைச் செயல்படுத்துவது ‘புழுக் குவளையைத் திறப்பது’ ('opening a can of worms') போன்றது என எச்சரித்தார். ஆனால் இப்போது தந்தைக்கு முரணாக அவரது மகன் பாஜக பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என்ற முழக்கத்தை முன்வைப்பதை பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் எனது தந்தையின் அரசை காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கவிழ்த்துள்ளன. இப்போது இருவரும் அந்த அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனர்" என கூறுகிறார்.

"இது அரசியல் யதார்த்தமாக மாறிவிட்டதால் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்து வி.பி.சிங்கின் அரசு கவிழ்க்கப்பட்டது. அப்படியென்றால் இப்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன? அன்றைய தலைவர்களை விட எனது தந்தையின் அரசியல் சிந்தனை 30 ஆண்டுகள் முன்னோடியாக இருந்தது என்பதை இது நிரூபித்துள்ளது,'' என்றார்.

இதற்கிடையில், அழைப்பிதழ் அட்டையில் அகிலேஷ் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் குமார், "ஏதோ ஒரு உத்தியின் ஒரு பகுதியாக அகிலேஷ் அழைக்கப்பட்டிருக்கலாம், ஏனெனில் வி.பி. சிங் உ.பி.யில் இருந்து வந்ததால் உ.பி அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உ.பி.யில் வி.பி. சிங்கின் மண்டல் பிரசாரத்தை அகிலேஷ் மூலம் முன்னெடுப்பது பற்றி ஸ்டாலின் நினைக்கலாம். இதன் பொருள் தேசிய அரசியலுக்கான பாதைக்கு உத்தரபிரதேசத்தை வழியாக நிறுவுவதாக இருக்கலாம்" என்று அவர் கூறினார்.

வி.பி.சிங்கின் சிலையை நிறுவுவதால் திமுக இரண்டு பலன்கள் பெறுகிறது. ஒன்று, தேசிய அரசியலில் களமிறங்க வேண்டும் என்ற நீண்டகால கள யுக்தி மற்றும் குறுகிய கால பலனாக தமிழகத்தில் திமுகவுக்கான அடிப்படை ஆதரவை பெற்றாலும் அதை ஒருங்கிணைப்பதுதான்.

முக்கியமாக, தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) மக்களவையில் 17 எம்பிக்களை பெற்றுள்ளது. சந்திரசேகர் ராவ் ஏற்கனவே தேசிய அரசியலில் களம் இறங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லோக்சபாவில் 39 எம்.பி.க்கள் பலம் கொண்ட திமுக, சந்தேகத்திற்கு இடமின்றி தேசிய அரசியலில் களம் இறங்கி தமிழகத்தில் இருந்து டெல்லியை அடையும் கனவில் உள்ளது.

இதையும் படிங்க:உத்தரகாசி மீட்புப்பணியில் மீண்டும் மீண்டும் தடங்கல்.. ஆஸ்திரேலியாவில் இருந்து நிபுணர் வரவழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details