இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ”விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கே சென்று தடை வாங்கிய முதலமைச்சர் பழனிசாமி, பிரச்சாரம் என்ற பெயரில், பச்சைப் பொய்களை, கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். இலவச மின்சாரம் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, கொத்துக் கொத்தாக கைது செய்தது அ.தி.மு.க. ஆட்சி. ஆனால் விவசாயிகள் மீது தி.மு.க. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்பட்டமாக கோயபல்ஸ் பிரச்சாரத்தை பழனிசாமி தொடங்கியிருக்கிறார். விவசாயிகளுக்காக போராடிய பேராசிரியர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி மகிழ்ந்த பழனிசாமி, தி.மு.க.வை நோக்கி சுண்டு விரலை நீட்டக் கூட தகுதியில்லை.
கரோனாவில் விவசாயிகள் அவதிப்பட்ட போது, 5,000 ரூபாய் கொடுக்க மறுத்து, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ’உதய்’ திட்டத்திற்கு கையெழுத்துப் போட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்று கைவிரிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு கைதூக்கி, ஆதரவளித்து வாக்களித்து விட்டு, இன்று விவசாயிகள் முன்பு நின்று மனசாட்சியின்றி நாடகமாடுபவர் பழனிசாமி. இப்போது கூட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, எங்கள் தலைவர் வாக்குறுதியளித்த பிறகு நடந்ததே தவிர, அதற்கு முன்பு வரை கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றவர்தான் இவர்.