டெல்லி:நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். அதைத் தொடர்ந்து வரவு செலவு அறிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து மாநிலங்களவையில் உடனடியாக விவாதிக்க திமுக சம்மன் ஒன்றை தாக்கல்செய்தது.
'கூட்டாட்சிக்கு எதிரான ஆளுநர்'
அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, உடனடியாக விவாதிக்க இயலாது எனவும் திமுகவின் சம்மன் குறித்து நண்பகலுக்கு மேல் விவாதிக்கலாம் எனவும் கூறினார். இதை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திருணாமுல், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
வெளிநடப்புக்குப் பின்னர், மாநிலங்களவை வளாகத்தில் செய்தியாளரைச் சந்தித்த திமுக எம்பி திருச்சி சிவா, "நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புகளின்போது, மசோதாவை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
ஆனால், அவர் அனுப்பவில்லை. அவர் கூட்டாட்சி மனநிலைக்கு எதிராகச் செயல்படுகிறார். இதை மாநிலங்களவை கவனத்திற்கு கொண்டுவர நினைத்தோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது" எனக் கூறினார்.
தமிழ்நாடு ஆளுநரால் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் இன்று (பிப்ரவரி 4) கவன ஈர்ப்பு தீர்மானத்தை தாக்கல்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: PG Neet 2022: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு