திருவனந்தபுரம்(கேரளா):உயர் கல்வியின் வளர்ச்சியை முடக்கியதாக, ஆளுநரின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியினர் இன்று (நவ.15) 'உயர்கல்வி பாதுகாப்புக் குழு' என்ற பதாகைகளுடன் அம்மாநில ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் திமுகவின் சார்பில் திருச்சி சிவா எம்.பி., பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, 'கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்காக ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகிறார். இதை அவருக்கு நினைவூட்டுகிறேன். எந்த விலையிலும், அத்தகைய நகர்வுகளை எதிர்ப்போம். சங் பரிவாரத்தின் 'இந்து ராஷ்டிரா' சித்தாந்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதை கேரளா அரசு எதிர்க்கும்' என்று கூறினார்.
ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்படும் கேரளா ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து வருகிறார். கேரளாவில் மட்டுமல்ல, பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் இதுபோன்ற விளையாட்டுகளில் ஆளுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆளுநர்கள் பாஜகவின் வழிகாட்டுதலின்படி, செயல்படுவதோடு அந்தந்த அரசாங்கங்கள் தங்களுக்கு அனுப்பிய மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
கேரளாவில் உள்ள உயர்தரமான உயர் கல்வி முறையை அழிக்கவே, ஆளுநரின் முயற்சிகள் உள்ளன. அதற்காக அரசியலமைப்பு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார். மேலும், நாட்டில் இந்து மதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே சங்கபரிவார் எண்ணம், அதற்காக பல்கலைகழகங்களுக்குள் பதுங்கி இருக்க முயல்வதோடு, மத்திய பல்கலைக்கழகங்களில் அதனை செய்கிறார்கள். ஆனால், கேரளாவில் செய்ய முடியாது. கேரளா அனைவரையும் மனிதர்களாகவே பார்க்கிறது. சாதி, மத அடிப்படையில் மக்களை வேறுபடுத்துவதில்லை. இந்த 'இந்துத்துவா' குறித்த நோக்கங்கள் அழிக்கப்பட வேண்டும், அதற்கான போராட்டம் தொடரும்' என்றார் யெச்சூரி.