தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"வெளிப்படையாக மன்னிப்பு கோருகிறேன்" - தர்மபுரி எம்.பி செந்தில்குமார்

பாஜக தேர்தல் வெற்றி குறித்து வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோருவதாக தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 9:15 PM IST

ஐதராபாத் : மக்களவையில் பாஜகவின் தேர்தல் வெற்றிகள் குறித்து வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக தர்மபுரி எம்.பி. செந்தில் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இன்று (டிச. 5) நடைபெற்ற இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், இந்தி பேசும் மாநிலங்களை பொதுவாக கோ மூத்திர மாநிலங்கள் (கௌமுத்ரா) என்று அழைப்பதாகவும், அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்றும் அந்த மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்விகளையும் சுட்டிக்காட்டி திமுக எம்.பி. செந்தில் குமார் மக்களவையில் பேசினார். திமுக எம்.பியின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது.

செந்தில் குமார் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும், செந்தில் குமார் எம்.பி.யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேநேரம் செந்தில் குமார் எம்.பி.யின் கருத்தை தான் ஏற்றுக் கொள்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து இருந்தார். பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதற்கு எம்.பி செந்தில்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்றும் அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டு உள்ளார். கூட்டணி கட்சியான திமுகவின் உறுப்பினர் வெளியிட்ட கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

அதேநேரம், அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த அளவில் ஜொலிக்க முடியவில்லை. குறிப்பாக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. சனாதன எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதாக கூறப்படும் நிலையில், அதன் காரணமாகவே தற்போது செந்தில் குமார் எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க :மக்களவையில் திமுக எம்.பி. செந்தில் குமார் கூறியது என்ன? எதிர்ப்பு வலுக்க என்ன காரணம்? முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details