தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!

Kanimozhi react lok sabha suspension: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய எம்.பி. அவையில் தங்களுடன் அமர்ந்து இருப்பதாகவும், பாதுகாப்பு குளறுபடி குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்கக் கோரிய தங்களை இடைநீக்கம் செய்து இருப்பதாகவும் இதில் என்ன ஜனநாயகம் என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

Kanimozhi
Kanimozhi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 4:01 PM IST

Updated : Dec 14, 2023, 4:36 PM IST

டெல்லி :நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், நேற்று (டிச. 13) 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பிக்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

இருவரையும் பிடித்து மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார் 4 பேர் கைது செய்து, தலைமறைவான இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களவையில் மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (டிச. 15) வழக்கம் போல் 11வது நாள் நாடாளுமன்றம் கூடியது. அவை கூடியது முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.பிக்கள் கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் என மொத்தம் 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்

மாநிலங்களவை திரிணாமுல் எம்.பியையும் சேர்த்து நடப்பு கூட்டத் தொடரில் மொத்தம் 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், "நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுமதி சீட்டுகளை வழங்கிய பாஜக எம்.பி. அவையில் இருக்கிறார். அந்த எம்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வழக்கில் என்ன நடந்தது என்று பார்த்தோம். விசாரணை கூட முழுமை அடையாமல், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் அனுமதி சீட்டுகளை வழங்கிய பாஜக எம்பி இடைநீக்கம் செய்யப்படவில்லை. அவர் எங்களுடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்து இருக்கிறார்.

பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் சபையில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்கிறார்கள். முதலில் 5 பேரை சஸ்பெண்ட் செய்து, பின்னர் ஒன்பது பேரை சஸ்பெண்ட் செய்தனர். அப்புறம் எப்படி இது ஜனநாயமாகும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - 15 எம்.பிக்கள் இடைநீக்கம்! என்ன காரணம்?

Last Updated : Dec 14, 2023, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details