இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில், நடிகர் ரஜினிகாந்தால் தொடங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி, மறைந்த எனது தந்தை முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் எனச் செய்தி பரவிவருகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்“ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் ஜனவரியில் புதிதாக கட்சி தொடங்கப்போவதாகவும், அக்கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக, பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தியை நியமிப்பதாகவும் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அர்ஜுனமூர்த்தி யார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்தது. அப்போதுதான் அவர் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவருமான மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இந்நிலையிலேயே இதனை தயாநிதி மாறன் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிட முடியாது’ -அமைச்சர் ஜெயக்குமார்!