புதுவை:புதுச்சேரிசட்டப்பேரவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது, சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளைத் தொடங்கினார்.
முதலாவதாக சபையில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரியும், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் மாநில அந்தஸ்து விவாகரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தினார்.
தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில், இது குறித்து பேரவையில் பேச மறுத்ததாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசை கண்டித்தும் பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் பேரவையை கால வரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார், சபாநாயகர் செல்வம். பேரவை தொடங்கி 25 நிமிடங்களில் பேரவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.