பாட்னா:வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கவும், அதுதொடர்பான கடிதத்தை கொடுக்கவும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை இன்று (மார்ச் 7) நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு பாட்னாவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடந்தது.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தை டி.ஆர்.பாலு நிதிஷ்குமாரிடம் கொடுத்தார். அதோடு தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போல போலி வீடியோக்களும், செய்திகளும் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின.
தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்தது. இதுபோன்று போலியான வீடியோக்களையும், செய்திகளையும் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்தது. அந்த வகையில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பீகார் மாநில குழுவினர் தமிழ்நாடு விரைந்து 2 நாட்களாக சென்னை, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 7) சென்னையில் வட மாநில தொழிலாளர்களை நேரில் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அந்த வகையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை சந்தித்த பீகார் குழுவினர் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு துறை செயலர் பாலமுருகன், "வட மாநில தொழிலாளர்கள் குறித்த போலியான வீடியோ பரவிய உடனேயே தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் பீகார் - தமிழ்நாடு மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக செயலாற்றி உள்ளன. பீகார் தொழிலாளர்களிடம் ஆரம்பத்தில் பதற்றம் இருந்தது. ஆனால், இப்போது பயம் குறைந்துள்ளது. இதை அவர்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தின்போது தெரிந்து கொண்டோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளை போலவே என் முடிவுகளும் இருக்கும் - அண்ணாமலை