புதுச்சேரி கிழக்கு மாநில கழகச் செயலாளரும், உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான அன்பழகன் எம்எல்ஏ இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் – திமுக கூட்டணி எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாததால் வருகிற தேர்தலில், ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு இணக்கமான ஆட்சி இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். மத்தியிலிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டுவர மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உப்பளத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர், தோல்வி பயத்தில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூறி காவல் துறையின் துணையோடு, அதிமுக தொண்டர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையில் புகாரளிக்காமல், நேற்று (மார்ச் 26) அம்பேத்கர் சாலையிலுள்ள சர்ச் எதிரில் புனித பாதை திருவிழா நடைபெறும் நேரத்தில் மலிவு விளம்பரத்துக்கு, திமுக வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார்.