தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடகம் வேண்டாம்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்! - மு.க.ஸ்டாலின்

சென்னை: பேச்சுவார்த்தை நாடகம் நடத்தாமல் விவசாயிகளின் ஒற்றை கோரிக்கையான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin

By

Published : Dec 18, 2020, 11:58 AM IST

Updated : Dec 18, 2020, 12:51 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், டெல்லியை முடக்கி போராடி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளை ஆதரித்து, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பச்சை நிறத் துண்டும், வேளாண் சட்டங்களை கண்டிக்கும் வாசங்கங்கள் அடங்கிய முகக்கவசங்களை அணிந்தும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ மத்திய பாஜக அரசு விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பதை கண்டித்து, இன்றோடு 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கரோனாவால் இந்தியாவே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், மத்திய பாஜக அரசு மட்டும், மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் ஓயாது!

மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம் என, மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் துணை நிற்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே எதற்காக யாரை காக்க இந்தச் சட்டங்களை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்?

டெல்லியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், அங்கேயே உறங்கி, சமைத்து உணர்வுபூர்வமான ஒரு போராட்டத்தை விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயத்தைப் பாழடிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அந்த ஒரே கோரிக்கை. அதுமட்டுமல்ல போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள், அந்நியக் கைக்கூலிகள், மாவோயிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஆகவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகளுடைய, நம்முடைய, மக்களுடைய கோரிக்கை. அதுவரை இந்த போராட்டம் ஓயாது ” என்றார்.

நாடகம் வேண்டாம்; வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்! - மு.க.ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த 21 விவசாயிகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: அமைச்சரின் கடிதத்தை விவசாயிகள் படிக்கவேண்டும்- பிரதமர்!

Last Updated : Dec 18, 2020, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details