ராம்நகரா : 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இன்று (மே. 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தேர்தல்கள் தோறும் ஆட்சியை நிர்ணயிக்கும் கிங் மேக்கர் கூறப்படும் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சி 21 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் வெற்றி பெற்றார்.
ஏறத்தாழ 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி கே சிவகுமார் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், எம்.எல்.ஏ ஒருவர் பெற்ற அதிகபட்ச வாக்கு வித்தியாசம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கனகபுரா தொகுதியில் 8வது முறையாக வெற்றி பெற்று டி.கே சிவகுமார் சாதனை படைத்து உள்ளார்.
கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியின் முகமாக கருதப்படும் டி.கே. சிவகுமார், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் கர்நாடக அரசியலை தீர்மானிக்கும் வகையில் பெரும் வாக்கு வங்கியை கொண்டு உள்ளனர். ஒக்கலிகா சமூகத்தின் முகமாக கருதப்படும் சிவகுமாருக்கு, காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல பெயர் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளருக்கான பெயர் பட்டியலில் அவரது பெயரும் நிச்சயம் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது.
சிறுவயது முதலே அரசியலில் இருக்கும் டி.கே. சிவகுமார், மாணவர் தலைவராக இருந்து முழு அரசியலுக்கு பிரவேசம் ஆனவர். 1989 ஆம் ஆண்டு சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எகல்.ஏ.வாக, டி.கே சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு நிலவிய அரசியல் குளறுபடிகளுக்கு இடையே பங்காரப்பா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணியாக டி.கே சிவகுமார் விளங்கினார்.
தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மீண்டும் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி கே சிவகுமார், அப்போது முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறையை கவனித்து வந்தார். தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு அதே தொகுதியில் வெற்றி பெற்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக டி.கே. சிவகுமார் பதவி வகித்தார்.