தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என தாய்க்கும், கடவுளுக்கும் தெரியும்" - டி.கே.சிவக்குமார் உருக்கம்! - டிகே சிவக்குமார்

காங்கிரஸ் கட்சிதான் தனது கடவுள் மற்றும் தாய் என்று கூறிய டி.கே.சிவக்குமார், தனது குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது தாய்க்கும், கடவுளுக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் முன் அவர் இதனை தெரிவித்தார்.

DK Shivakumar
குழந்தை

By

Published : May 16, 2023, 12:58 PM IST

Updated : May 16, 2023, 1:30 PM IST

கர்நாடகா:கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்று தீர்மானிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருகிறது.

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக உழைத்த டி.கே.சிவக்குமார்தான் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், கட்சியின் மூத்த தலைவரும் 9 முறை எம்எல்ஏவாக தேர்வானவருமான சித்தராமையா அடுத்த முதல்வராக வர வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் யார்? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று(மே.16) டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சித்தராமையா நேற்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவர் நேற்றே டெல்லி செல்லவிருந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக செல்லமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி எனது தாய் போன்றது. குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கும் தாய்க்கும் தெரியும். நான் என் கடவுளை சந்திக்க கோவிலுக்கு செல்கிறேன். நான் தனியாக செல்கிறேன். எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் எனக்கு மிகப்பெரிய பலம். காங்கிரஸ் கட்சிதான் எனது கோவில். நான் எனது பணியை செய்துள்ளேன். மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை காப்பாற்ற கடுமையாக உழைக்க வேண்டும்" என்று கூறினார்.

இதனிடையே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்கு ராகுல்காந்தி விரைந்துள்ளார். கர்நாடகாவில் முதலமைச்சர் தேர்வு தொடர்பாக அங்கு ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரும் மல்லிகார்ஜுன கார்கேவை விரைவில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வென்ற போதிலும், முதலமைச்சர் தேர்வில் காங்கிரஸில் தொடரும் இழுபறியால் கர்நாடக தேர்தல் களத்தில் இன்னமும் சூடு குறையவில்லை.

இதையும் படிங்க: "மோடி மேஜிக் இமேஜை வென்ற பிராண்ட் ராகுல்" - காங்கிரஸ் களியாட்டம்!

Last Updated : May 16, 2023, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details