பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 224 தொகுதிகளை கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கர்நாடக் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் மேலிடத்தை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.கே சிவகுமாரின் டெல்லி பயணம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியான சிறிது நேரத்தில் பயணம் ரத்து செய்யபட்டது கர்நாடக அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.
மேலும், கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்யும் குழுவில் தனக்கு பாதகமான செயல்கள் நடைபெறுவதை அடுத்து டி.கே. சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, திங்கட்கிழமை மதியம் டெல்லி சென்ற நிலையில், முதலமைச்சர் தேர்வு குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் டெல்லி பயணம் ரத்து குறித்து டி.கே சிவகுமார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது. உடல் நலப் பிரச்சினைகள் கரணமாக டி.கே. சிவகுமாரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், தனக்கு வயிற்றில் பிரச்சனை இருப்பதகாகவும் அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவர் வர உள்ளாதாகவும் கூறினார். வயிறு எரிவதாகவும் ஏதோ தொற்று போல் தெரிவதாகவும் காய்ச்சல வேறு அடிப்பதால் தயவு செய்து தொந்தரவு செய்யாமல் தன்னை விட்டுவிடுமாறும் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில் இன்று (மே. 15) அவர் டெல்லிக்கு செல்லவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் தன்னையும், சித்தராமையாவையும் ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பற்றிய யூகங்களுக்கு பதிலளித்த சிவக்குமார், தனக்கு 135 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறினார்.
டி.கே. சிவகுமாரும், சித்தராமையாவும் கூட்டாக டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக டி.கே. சிவகுமார் பயணத்தை தவிர்த்ததாக கூறப்பட்டது. தனது பிறந்த நாளுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் குடும்பத்தினருடன் குலதெய்வ கோயிலுக்கு செல்ல இருப்பதால் டெல்லிக்கு பின்னர் புறப்பட உள்ளதாக சிவகுமார் கூறி இருந்தார். இந்நிலையில் திடீரென அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல், கர்நாடக அரசியலில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க :"மோடி மேஜிக் இமேஜை வென்ற பிராண்ட் ராகுல்" - காங்கிரஸ் களியாட்டம்!