புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே போடப்பட்டு உள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி அடுத்த ஒதியம்பட்டில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடமாக தீபாவளி பண்டிகையையொட்டி, போனஸ் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு போனஸ் தர வலியுறுத்தி புதுச்சேரியில் தொழிலாளர்கள் தர்ணா இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய போனஸை மொத்தமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் இன்று (அக். 28) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திமுக மாநில அமைப்பாளர் சிவா நேரில் கலந்து கொண்டு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சிவா, "உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த தோல் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சொற்ப அளவில் ஊதியத்தை கொடுத்து வேலை வாங்குகிறது. மேலும் கடந்த மூன்று ஆண்டு காலமாக போனஸ் வழங்கவில்லை.
எனவே, உடனடியாக போனசை வழங்க வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை கையில் வைத்துக் கொண்டு நிர்வாகம் ஊழியர்களை வஞ்சிக்கிறது. தமிழகத்தில் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக காவல்துறை உரிய விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரியை பொருத்தவரை, துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே பொதுமக்கள் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் ஊரில் இல்லாத போதும் கூட இதே நிலை தொடர்கிறது. பூங்காவும் மூடப்பட்டுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும்" என்று சிவா வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி முறிவு; திமுகவின் கணக்கு என்ன? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக தகவல்