புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் இன்று ( ஏப்.07 ) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த சில வாரங்களாக கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு உயிர் உயிரிழந்தார்.
இதனால், புதுச்சேரியில் தினமும் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் 15 விழுக்காடு பேர் தொற்று உறுதி செய்யப்படுவதாக கூறினார். எனவே நோய்தொற்றை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், அதன்படி மக்கள் அதிகம் கூடும் சன்டே மார்க்கட், கடற்கரை சாலை, மால், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், பார், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய முக்கிய பொது இடங்களில் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.