புதுச்சேரி:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2022-யை தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நேற்று (நவ.1) தொடங்கியுள்ளன.
மாவட்ட ஆட்சியர் - மேற்பார்வை
இப்பணிகள் 2022 ஆம் ஆண்டு ஜன. 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நவ. 01 ஆம் தேதி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூர்வா கார்க் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டிலை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாவட்டத்துக்கான (மாகே மற்றும் ஏனாம் உட்பட) வரைவு வாக்காளர் பட்டியலில் 3,95,226 ஆண் வாக்காளர்கள், 4,42,193 பெண் வாக்காளர்கள், 97 மாற்று பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 8,37,516 வாக்காளர்கள் உள்ளனர்.