மும்பை:மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான வில் அம்பையும் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை சிவசேனா கட்சியின் விதிகள் மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று (பிப். 20) மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மட்டுமே எங்களின் முழு நம்பிக்கை. இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுத்தது என்பது தெரியவில்லை.
சொந்த விருப்பங்களுக்காக பாஜக, நாடு முழுவதும் ஜனநாயகத்தை அழித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படாமல் போனால், 2024ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் ஜனநாயகமும், தேர்தலும் இருக்காது. சிவசேனா கட்சி, அதன் பெயர் மற்றும் வில் அம்பு சின்னம் என்னிடம் இருந்து திருடப்பட்டிருக்கலாம்.
ஆனால், தாக்கரே என்ற பெயரை யாராலும் திருட முடியாது. பாலாசாகேப் தாக்கரேவின் குடும்பத்தில் பிறந்ததை நான் அதிர்ஷ்டமாக எண்ணுகிறேன். மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஒரு கட்சியின் நிதி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு உரிமை கிடையாது.