டெல்லி:நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் 23 ஆம் தேதி தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது.
இந்த பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கண்டன அறிக்கைகளையும், கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் டெல்லியின் துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.