மும்பை:பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இன்று(ஜூலை 7) காலை காலமானார். அவருக்கு வயது 98.
வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு பிரச்னைகளுக்கு அவர் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், மூச்சுத்திணறல் காரணமாக மும்பையிலுள்ள இந்துஜா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, ஆக்ஸிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
பாலிவுட்டின் சோக நாயகன் என்று அழைக்கப்படும் திலீப் குமார் ஆறு தசாப்தங்களைக் கடந்து பாலிவுட்டில் நடித்து வந்தார். தேவதாஸ், நயா தர், முகலே ஆசாம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் திரைப்படங்கள் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு கிலா என்ற படத்தில் தோன்றிய அவர், 1997ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதையும், 2015ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
1998ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.