டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு வந்தன. மணிப்பூர் விவகாரம், ராகுல்காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டாலும், மறுபுறம் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.
கடந்த 26ஆம் தேதி, சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா, பிஞ்சியா ஆகிய சமூகங்களை எஸ்டி (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அன்றைக்கே மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.
கடந்த 7ஆம் தேதி, டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற மாநிலங்களவையில் முக்கியமான ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்டியல் சாதிகள் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, மருந்தக திருத்தச் சட்ட மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணைய மசோதா, ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் மசோதா ஆகிய ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் அனைத்தும் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.