மத்திய அரசுக்கு மூன்று மாசம் என்பது எத்தனை நாட்கள்..? தர்மபுரி எம்.பி. சரமாரி கேள்வி டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார், "கடந்த மார்ச் 22-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, 60 கிலோ மீட்டர் இடைபட்ட தூரத்தில் உள்ள டோல்கேட்டுகள் அடுத்த மூன்று மாதங்களில் மூடப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் மூன்று மாதங்களை முடந்து 9 மாதங்கள் ஆவதாகவும், பாஜக அரசு மூன்று மாதத்தை எத்தனை நாட்களாக கணக்கிடுகிறது என எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டிலேயே அதிகமான டோல்கேட்டுகள் தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக 57 டோல்கேட்கள் உள்ளதாகவும் கூறினார்.
அடுத்த ஆண்டு மார்ச் வரை கணக்கிடால் 60 டோல்கேட்டுகளாக அதிகரிக்க உள்ளதாகவும் ஆனால் விதிப்படி மொத்தம் 16 டோல்கேட் மட்டுமே தமிழகத்தில் இருக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.பி தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை 79-ல் மட்டும் மூன்று டோல்கேட்டுகள் 11 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், 27 இடங்களில் நான்கு வழி சாலைகள் திடீரென இரண்டு வழி சாலைகளாக மாறுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். அனுமதிக்கு அதிகமான டோல்கேட்டுகளில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுவதாகவும், பொதுவான 100 மீட்டர் விதிகளை கடைபிடிப்பது இல்லை என்றார்.
இடைவெளியில் வாகனங்கள் காத்திருந்தால் பணம் செலுத்தாமல் செல்லலாம் என்ற விதியும் பின்பற்றப்படுவதும் இல்லை என்று குறிப்பிட்டார். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதாகவும் அதனை டோல் பிளாசாக்கள் கண்டு கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
மேலும் அனைத்து டோல்கேட்டுகளும் 100 மீட்டர் மற்றும் பத்து வினாடி விதிகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.பி. கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:Parliement Winter session 2022: விஜய் வசந்த் எம்.பி. வைத்துள்ள முக்கிய கோரிக்கை!