மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தின் தார் நகரைச் சேர்ந்த பிரியங்க் திவாரி என்பவர் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், அவரது மனைவி பிரியங்காவும், 9 வயது மகளும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். ஒற்றை தாயாக மகளை வளர்க்க பிரியங்கா மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இவர்களின் வேதனையைப் புரிந்து கொண்ட பிரியங்காவின் மாமனார், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார்.
மருமகளுக்கு அவரே மாப்பிள்ளை தேடத் தொடங்கினார். நீண்ட முயற்சிக்குப் பிறகு, மருமகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். நாக்பூரில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. மாமனாரும் மாமியாரும் பெற்றோர்களாக முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர், மணமக்களுக்கு தங்களது மகனின் பங்களாவை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மருமகளை மகளாக கருதி, மறுமணம் செய்து வைத்த மாமனார், மாமியாருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.