டெல்லி : கடும் பனிமூட்டம், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் விமானங்களை இயக்குவதில் சிரமமான சூழல் நிலவி வருகிறது. போகி பண்டிகை கொண்டாட்டம், பனிமூட்டம் உள்ளிட்ட காரணங்களால் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பல்வேறு நகரங்கள் பனி சூழ்ந்து காணப்படுகின்றன.
இதனால் தினசரி விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டத்தால் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும், 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. அதேபோல் சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்துடன் மூடுபனியும் இணைந்து வெண்புகை போன்று காட்சி அளிப்பதால் விமானங்கள் இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது.
மோசமான வானிலை காரணமாக சென்னையில் தரையிறக்க வேண்டிய விமானங்கள் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால், விமான நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. விமானங்கள் தாமதமாகும் நிலையில், பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் நிலையமே சந்தைக் கடை போல் காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், இது போன்ற சூழலை தவிர்க்க விமான நிறுவனங்கள் கடைபிடிக்கக் கோரி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன் படி மூன்று மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாகும் பயணங்களை தானாக முன்வந்து விமான நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் தாமதங்கள் தொடர்பான துல்லியமான நிகழ்நேர தகவலை வெளியிட வேண்டும் என்றும் விமான நிறுவனங்களின் அந்தந்த இணையதள பக்கங்களில் அவை வெளியிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான தாமதத்தால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு விமான தாமதம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைக் அளிக்க வேண்டும், மற்றும் விமான நிலையங்களில் உள்ள விமான ஊழியர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம், விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில், இந்த விதிகளை தளர்த்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :69வது பிலிம்பேர் விருது : அனிமல் 19 பிரிவுகளில் தேர்வு! தமிழ் படம் எதுவும் இருக்கா?