டெல்லி: கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் இண்டிகோ 6E-7339 என்ற விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து விண்ணில் பறக்க விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென பயணி ஒருவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தார். இந்த சம்பவம் சகப் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பீதியை கிளப்பியது.
எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது குறித்து விமான ஓட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றட்டனர். தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு, ஏறத்தாழ 3 மணி நேரத்திற்குப் பின் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. மேலும் இண்டிகோ விமானம் புறப்படும்போது எமர்ஜென்சி கதவை பயணி திறந்தது குறித்து விசாரித்து வருவதாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், "கடந்த 10ஆம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும், விமானம் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.