தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 30, 2023, 8:30 PM IST

ETV Bharat / bharat

கோயில் கிணற்றில் விழுந்து 11 பேர் பலி: ஸ்ரீராம நவமியன்று சோகம் - பிரதமர் இரங்கல்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றில் தவறி விழுந்ததில் பக்தர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Temple well
கோயில் கிணறு

இந்தூர்:மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் அருகே உள்ள படேல் நகரில் பெலேஷ்வர் கோயில் உள்ளது. இன்று (மார்ச் 30) ஸ்ரீராம நவமியையொட்டி காலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் படிக்கிணற்றில் ஏராளமான பக்தர்கள் ஏறி நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கிணறு இடிந்து விழுந்ததில், அதில் நின்று கொண்டிருந்த 25க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிணற்றுக்குள் தவறி விழுந்தவர்கள் காப்பாற்றும்படி கதறினர்.

இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கிணற்றுக்குள் விழுந்தவர்களை ஏணி மற்றும் கயிறு மூலம் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் நீரில் மூழ்கியதில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 19 பேர் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து இந்தூர் காவல் ஆணையர் மார்க்கண்ட் தியோஸ்கர் கூறுகையில், "30-35 பக்தர்கள் கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் நிலைமையை அவர் கேட்டறிந்தார்.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோயில் கிணற்றில் விழுந்தவர்களை விரைந்து மீட்க இந்தூர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: அரியவகை நோய்களை குணப்படுத்தும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு!

ABOUT THE AUTHOR

...view details