புதுச்சேரி:புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதே போன்று இந்த புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் உட்புறம், வெளிப்புறத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விநாயகரை தரிசிக்க 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை பக்தர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உற்சவர் மூர்த்திக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு நர்த்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் வெளியே வரிசையில் இரண்டு கி.மீ தூரம் நிற்கும் பக்தர்கள், கோயில் உட்புறத்தில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் பார்ப்பதற்கு வசதியாக டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.