டெல்லி:"இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருவோம்" என கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ட்வீட் செய்துள்ள கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, "இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருவது வேதனையளிக்கிறது.
இங்கு இயங்கிவரும் தன்னார்வ அமைப்புகளான கிவ் இந்தியா, யுனிசெஃப் ஆகியவற்றிற்கு ரூ.135 கோடி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மருத்துவ வசதிகள், கிராம மக்களின் தேவை, கரோனா பரவல் தடுப்பு ஆகிய வேலைகளை இந்த அமைப்புகள் மேற்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அலுவலர் சத்ய நாதெள்ளா கூறுகையில், "இந்தியாவில் மக்கள் படும் இன்னல்கள் துயரத்தை ஏற்படுத்துகிறது. இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நிறுவனம் தயாராகவுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.