குர்னூல்: ஆந்திர மாநிலம், குர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு தேவரகட்டு பன்னி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நேற்று (அக். 24) வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் நோக்கம்:இந்த திருவிழாவின் போது தேவரகட்டு மலையில் உள்ள மல்லேஸ்வரருக்கும், மல்லம்மாவுக்கும் திருமணம் நடைபெறும். அப்போது மக்கள் மல்லேஸ்வரர் மற்றும் மல்லம்மாள் உள்ளிட்ட சாமி சிலைகளை படையகாட்டு, ரக்ஷபாதா, சாமி விருட்சம், நக்கிபசவண்ணகுடி ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வருவர்.
இந்த சாமி சிலைகளை வாங்குவதற்கு நேரணி, நேரணி தண்டா, கொத்தபெட்டா ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு குழுவாகவும், ஆலூர், சுளுவாய், எல்லார்த்தி, அரிகேரா, நித்ராவட்டி, பிலேஹால் ஆகிய ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றொரு குழுவாகவும் சேர்ந்து தங்களது குலதெய்வ சிலைகளை ஒருவருக்கொருவர் குச்சியுடன் சண்டையிட்டுக் கைபற்றிக் கொள்வர்.
முன்னதாக, மல்லேஸ்வரரும், மல்லமாவும் இணைந்து அரக்கனை வதம் செய்து பன்னி உற்சவம் நடத்தினர் என்பது புராணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று (அக். 24) நடைபெற்ற திருவிழாவில் இரு தரப்பையும் சேர்த்து மொத்தம் 100 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிரிழப்பு, காயம் உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த திருவிழாவில் காணப்பட்டாலும், பாரம்பரியத்திற்காக இந்த விழா அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, திருவிழாவை முன்னுட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கு முன்னதாக மக்களுக்கு திருவிழா குறித்து விழிப்புணர்வு முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டது. இருப்பினும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தேவரகட்டு பன்னி திருவிழாவில் இது போன்ற அசம்பாவிதங்கள் சர்வசாதரனமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கேரளாவில் லோகேஷை சூழ்ந்த ரசிகர்கள்.. காலில் காயம்... போலீசார் லத்தி சார்ஜ்.. என்ன நடந்தது?