மேற்குவங்கம்:மேற்குவங்க மாநிலத்தில் நேற்று (ஜூலை 8) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 73,887 உள்ளாட்சி இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களமிறங்கினர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டன. இதனால், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு இருந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மத்தியப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக கூச்பெஹர், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் நடந்தது. இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கத்தி, துப்பாக்கி, இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கிக் கொண்டனர். சில இடங்களில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்தனர், வாக்குச்சாவடிகளை சூறையாடினர். மேற்குவங்க மாநிலம் நேற்று கலவர பூமியாக காணப்பட்டடது. இந்த கலவரங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் உள்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 13 பேர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள்.