டேராடூன்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊரங்கு தளர்வுகளை அறிவித்தாலும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தடைவிதித்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா அடுத்த ஆண்டு நிச்சயம் நடைபெறும் என அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் தெரிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கும்பமேளா நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கும்பமேளாவின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.