காங்கிரஸ் ஆட்சியை தக்கவைப்பாரா நாராயணசாமி? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு! - காங்கிரஸ் ஆட்சியை தக்கவைப்பாரா நாராயணசாமி ?
காங்கிரஸ் ஆட்சியை தக்கவைப்பாரா நாராயணசாமி ?
By
Published : Feb 18, 2021, 5:55 PM IST
|
Updated : Feb 19, 2021, 7:49 AM IST
17:37 February 18
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் (நேற்று பிப்.18) உத்தரவிட்டார். ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. மறுபுறத்தில் எதிர்க்கட்சியின் ஆதரவும் 14ஆக உயர்ந்தது. தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 15 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் அரசு
எதிர்க்கட்சி கூட்டணி
காங்கிரஸ்-10
என்.ஆர்.காங்கிரஸ்-7
திமுக-3
அதிமுக-4
சுயேச்சை-1
பாஜக -3
இச்சூழலில், எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என (நேற்று பிப்.18) ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, புதிதாக பொறுபேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பிப்ரவரி 22ஆம் தேதி 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பதவியேற்ற நாளில் அதிரடியாக தமிழிசை உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
பதவி ஏற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பதும் எனக்குத் தெரியும். மக்களின் நலனுக்காகச் செயல்படுவேன். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்குத் துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுப்பேன்" என தெரிவித்தார்.
மேலும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், அதிமுக எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் தமிழிசை சௌந்தரராஜனை ராஜ்நிவாஸில் நேற்று சந்தித்த பிறகு ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.