காங்கிரஸ் கட்சியின் 137ஆவது தொடக்க நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடியை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றினார்.
இந்நிகழ்வில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ஏ கே ஆந்தோனி, கே சி வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் உரையாற்றிய சோனியா காந்தி, "இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வரலாறு திரிக்கப்படுகிறது. பன்முகத் தன்மை கொண்ட கலாசாரம் அழிக்கப்படுகிறது.
பொது மக்கள் அச்சத்துடன் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர். ஜனநாயக ஆட்சி ஓரங்கட்டப்பட்டு அராஜக ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அதுவொரு இயக்கம். காங்கிரஸ் தலைவர்கள் நாட்டு விடுதலைக்காக போராடி, சிறை சென்று, தங்கள் உயிரையும் அர்ப்பணித்துள்ளனர்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு அதன் மதிப்பு தெரியாது. நாட்டின் அஸ்திவாரத்தின் மீதே தாக்குதல் நடைபெறுகிறது. இதுபோன்ற நேரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருக்காது. நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது" எனப் பேசினார்.
இதையும் படிங்க:Covid vaccination in India: நாட்டில் 15-18 வயதில் 7.4 கோடி தடுப்பூசி பயனாளர்கள்