ஜெய்ப்பூர்:ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பிச்சார் என்ற 24 வயது இளைஞர் சிகார் மாவட்ட மைதானத்தில் இருந்து தொடர் ஒட்டத்தை மேற்கொண்டார். அங்கிருந்து, மார்ச் 29ஆம் தேதி இரவு 9 மணி தனது ஓட்டத்தை தொடங்கிய சுரேஷ், ஏப். 2ஆம் தேதி மாலை 6 மணியளவில் டெல்லியை வந்தடைந்தார்.
350 கி.மீ., 50 மணிநேரத்தில் ஓடி வந்த இளைஞன் கையோடு, நாகௌர் எம்பி ஹனுமன் பெனிவாலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். ராணுவ ஆள்சேர்ப்பு தாமதாகி வரும் நிலையில், இதுகுறித்த பிரச்சனை தீர்க்கக்கோரி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, பெனிவால் தனது பேஸ்புக் பதிவில்,"தொடர்ந்து தாமதாகும் ராணுவ ஆள்சேர்ப்பை உடனடியாக நடத்தக்கோரி, சுரேஷ் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த பிரச்சனையை மக்களவையில் பலமுறை எழுப்பியுள்ளேன். இதற்காக தொடர்ந்து போராடுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த சுரேஷ்?: 1 மணிநேரத்திற்கு 6 கி.மீட்டரை கடக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் ஓடியுள்ளார். இதே வேகத்தில் வந்த சுரேஷை, அவரது நண்பர்கள் காரில் பின்தொடர்ந்துள்ளனர். 50 மணிநேர ஓட்டத்தில் ஒருமுறை மட்டுமே அவர் உணவு அருந்தியுள்ளார். மேலும், அவருக்கு ஓய்வு எடுக்க வேண்டிய இடங்களை அந்தந்த பகுதிகளில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.