டெல்லி:புத்தாண்டு தினத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியர் அஞ்சலி, 12 கிலோ மீட்டர் தூரம் காரில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவத்தின் தடம் மறைவதற்குள் அதேபோன்று மற்றொரு சம்பவம் டெல்லியில் அரங்கேறி இருப்பது நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், மதுபோதை ஆசாமியால் காரில் சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக சுவாதி மாலிவால் உள்ளார். மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய நள்ளிரவு நேரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகப்பகுதியில் அவர் நின்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எய்ம்ஸ் வளாகத்தின் இரண்டாவது கேட் பகுதியில் காருடன் வந்த மர்ம நபர், சுவாதி மாலிவாலிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தவறான சைகைகளை காட்டி அழைத்ததாகவும் கூறப்படுகிறது. சுவாதி மாலிவால் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அந்த நபர் சென்றதாக சொல்லப்படுகிறது.
சிறிது தூரம் சென்ற நபர், காரை பின்னோக்கி செலுத்தி, மீண்டும் சுவாதி மாலிவாலை நோக்கி தகாத முறையில் சைகை காட்டி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான சுவாதி மாலிவால், மதுபோதை ஆசாமியை அவரது கார் அருகே சென்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
கார் கண்ணாடியைத் தாண்டி, காரினுள் கை நீட்டி, சுவாதி மாலிவால் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென காரின் சைடு விண்டோவை சாத்திய நபர் காரை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சுவாதி மாலிவால், காரில் இருந்து கை விலகி, சாலையில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
சாலையில் தவறி விழுந்த சுவாதி மாலிவாலுக்கு கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்த போலீசார் சுவாதி மாலிவாலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக சுவாதி மாலிவால் அளித்தப் புகாரில் விசாரணை நடத்திய போலீசார், துரித நடவடிக்கை மேற்கொண்டு, சுவாதி மாலிவாலை சில அடி தூரத்திற்கு இழுத்துச்சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்தனர். சுவாதி மாலிவால் அளித்த கார் அடையாளங்களைக் கொண்டு நபரை போலீசார் கைது செய்ததாக கூறினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஹரிஷ் சந்திரா என்றும்; டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் ஹரிஷ் சந்திரா பணியாற்றி வருவதாகவும் போலீசார் கூறினர். சம்பவம் தொடர்பாக கைது செய்யபப்ட்ட ஹரிஷ் சந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், மது போதை ஆசாமியால் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:SSC MTS Exam: எஸ்.எஸ்.சி.தேர்வை தமிழில் எழுதும் வசதி அறிமுகம்!