டெல்லி: ஹோலி பண்டிகையின் போது சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வர்ணம் பூசுவது போன்று தகாத முறையில் இளைஞர்கள் சிலர் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளகங்களில் வேகமாக பரவிய நிலையில், சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹோலி பண்டிகை களைகட்டின. உள்ளுர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டு வெகு விமரிசையாக கொண்டாடினர்.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டதின் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஜப்பான் நாட்டு பெண் சுற்றுலா பயணியை வலுக்கட்டாயமாக இளைஞர்கள் சிலர் இழுத்து வண்ணம் பூசினர். மேலும் அந்த பெண்ணிடம் தகாத முறையில் இளைஞர்கள் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது.
அந்த வீடியோவில், "இளைஞர்கள் சிலரின் பிடியில் ஜப்பானிய பெண் சிக்கிக் கொள்கிறார். அந்த பெண்ணின் முகம் மற்றும் ஆடையில் இளைஞர்கள் வர்ணத்தை பூசுகின்றனர். மேலும் ஒரு இளைஞன் பெண்ணின் தலையில் முட்டையை அடித்து உடைக்கிறார். மற்றொரு சிறுவன் தகாத முறையில் நடந்து கொள்கிறான். இந்த கூட்டத்தில் இருந்து பெண் தப்பிக்க முயற்சிப்பது" பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், வீடியோ எடுக்கப்பட்டது பஹார்கஞ்ச் பகுதியில் நடந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜப்பான் பெண் சுற்றுலா பயணி எந்த புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஜப்பான் தூதரகத்திலும் சம்பவம் தொடர்பாக பெண் புகார் கூறவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக சென்ற நிலையில், சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் தாமாக முன்வந்து விசாரணையை துவக்கி உள்ளனர். முதல் கட்டமாக வீடியோவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிறுவன் உள்பட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவை டேக் செய்து கருத்து பதிவிட்ட பாஜக தலைவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதாக பதிவிட்டு உள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை கார் பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த தென் கொரிய நாட்டு பெண் யூடியூபரிடம் உள்ளூர் இளைஞர்கள் சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இது தொடர்பாக பெண் யூடியூபர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்!