டெல்லி :கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்படுத்திய விவகாரத்தில் மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்ட், நீலம் தேவி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இருக்கை பகுதியில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட மனோரஞ்சனின் நண்பரையும், இந்த வழக்கில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்ட், நீலம் தேவி ஆகியோரின் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நான்கு பேரை போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கில் தொடர்புடைய நான்கு பேரிடமும் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி 15 நாட்கள் காவலை நீடிக்குமாறு டெல்லி போலீசார் தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், நான்கு பேரின் காவலை ஜனவரி 5ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மீதமுள்ள இருவருக்கும் விரைவில் காவல் நிறைவடைய உள்ள நிலையில், அவர்களும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.