டெல்லி: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறையும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுவருகின்றன. அந்த வகையில், வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், பள்ளிகளை அவசரமாக அவசரமாக திறக்க முனைப்பு காட்ட வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலத்தில் கோளாறு ஏற்படுவதாகவும் பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்துவருகின்றனர். இதனிடையே, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் என்ன
- வகுப்பறையில் 50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி.
- இரண்டு இருக்கைகளுக்கு இடையில் ஒரு இருக்கை இடைவெளி என்ற வகையில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
- காலை, மாலை என இரண்டு நேரம் வகுப்புகள் நடத்தப்படும்.
- மாணவர்கள் உணவு, புத்தகங்கள், பேனா போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது.
- உணவு இடைவேளையின்போது மாணவர்கள் திறந்த வெளியில், தனித்தனியே வைத்து சாப்பிட வேண்டும்.
- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பெற்றோர்களின் விருப்பம். பெற்றோர்கள் விரும்பவில்லை என்றால், பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது.
- கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.
- பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் தெர்மல் ஸ்கேனர்கள் வைக்க வேண்டும், சானிடைசர்கள், முகக் கவசங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
- அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் உள்ளே வருவதையும் வெளி செல்வதையும் கண்காணிக்க பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க:'அவசர அவசரமாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம்' - எய்ம்ஸ் பேராசிரியர்