டெல்லி:டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலும், துணைநிலை ஆளுநருக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கும் வகையிலும் மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி நிர்வாக திருத்த மசோதா நேற்று(ஆகஸ்ட் 7) மாநிலங்களவையில் நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன. அதேநேரம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. மாநிலங்களவையில் நிறைவேறியதையடுத்து இந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த டெல்லி நிர்வாக திருத்த மசோதா குறித்த முக்கிய விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்...
அமித்ஷா உறுதி:டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இந்த மசோதா தலைநகர் டெல்லியில் ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வரும் என உறுதி அளித்தார்.
என்சிசிஎஸ்ஏ: டெல்லி நிர்வாக திருத்த மசோதா, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் (NCCSA)-வை உருவாக்க வழி செய்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக முதலமைச்சரும், செயலாளராக டெல்லியின் தலைமைச் செயலாளரும் பதவி வகிப்பார்கள். டெல்லியில் குரூப் ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களை செய்யும் அதிகாரம் இந்த ஆணையத்திற்கு உள்ளது. மேலும், இந்த ஆணையத்தில் டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார். குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என இந்த நிர்வாக திருத்த மசோதா கூறுகிறது.
முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை: டெல்லி நிர்வாக திருத்த மசோதாவின்படி, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் இரண்டு உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவரான முதலமைச்சர் இல்லாத நேரத்திலும், இரண்டு உறுப்பினர்களும் கூட்டத்தை நடத்த முடியும்.
துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்:தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தின் பரிந்துரைகளை அங்கீகரிக்கவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்று இந்த மசோதா கூறுகிறது. ஆணையத்தால் எடுக்கப்பட்ட முடிவு சட்டவிதிகளுக்கு பொருந்தவில்லை என்றால், இது தொடர்பாக துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.