தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த மல்யுத்த வீரர்கள் கைது! - பிரிஜ் பூஷன்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த மல்யுத்த வீரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

Delhi Security
போலீஸ்

By

Published : May 28, 2023, 2:01 PM IST

டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கண்டித்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிஜ் பூஷன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகாட், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளாமனா மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீரர்களின் இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் மறுத்துள்ளார். மறுபுறம், டெல்லி போலீசார் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்து வருவதாக வீரர்கள் குற்றம் சாட்டினர்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அதேபோல், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவசாய அமைப்புகள் ஜந்தர் மந்தர் சென்று வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.

இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பையொட்டி இன்று(மே.28) நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி அமைதிப் பேரணி செல்லப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அறிவித்திருந்தனர். புதிய நாடாளுமன்றம் முன்பாக வீராங்கனைகளின் மகா பஞ்சாயத்து நடத்த முடிவு செய்திருந்தனர். இதனால், டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வீரர்களை கைது செய்தனர். போலீசார் வீரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வினேஷ் போகத், "எங்களை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே செல்ல அனுமதிக்கவில்லை. எங்களது வீரர்களை கைது செய்துள்ளனர். பிரிஜ் பூஷன் நாடாளுமன்றத்தின் உள்ளே இருக்கிறார், ஆனால் நாங்கள் ஜெயிலுக்குப் போகிறோம்" என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, "நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது, யாருக்கும் நீதி கிடைப்பதில்லை. போலீசார் எங்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. திட்டமிட்டபடி மகாபஞ்சாயத்து கண்டிப்பாக நடக்கும். குற்றவாளி வெளியில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், நீதிக்காக அமைதி வழியில் போராடும் எங்களை மோசமாக நடத்துகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர்.. சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 'செங்கோல்'

ABOUT THE AUTHOR

...view details