டெல்லி : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், நேற்று (டிச. 13) 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
இருவரையும் பிடித்து மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், 4 பேர் கைது செய்த நிலையில், தலைமறைவான இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாடாளுமன்றத்திற்குள் களேபரத்தில் ஈடுபட்டவர்கள் சாகர் சர்மா, மனோரஞ்சன் என்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி என அடையாளம் காணப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டவர்களை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை நடத்த, சிறப்பு குழு 15 நாட்கள் காவல் கோரியது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நான்கு பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து உத்தரவிட்டனர். நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமறைவான நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் 15 பேரை நாடாளுமன்றத்தின் அவை பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நாடாளுமன்றம் பாதுகாப்பு குளறுபடி : 5வது நபர் கைது! போலீசார் கூறிய திடுக் தகவல்!