தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Wrestlers sexual assault: பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு: மங்கோலியா, இந்தோனேஷியாவிடம் ஆதாரங்களை திரட்டும் டெல்லி காவல்துறை! - வெளிநாடுகளிடம் உதவி கோரும் டெல்லி காவல்துறை

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில், டெல்லி காவல்துறை கஜகஸ்தான், மங்கோலியா, இந்தோனேஷியா நாடுகளின் மல்யுத்தக் கூட்டமைப்புகளின் உதவியை நாடியுள்ளது. அந்நாடுகளில் நடந்த மல்யுத்த போட்டிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், சிசிடிவி பதிவுகளை தரும்படி டெல்லி போலீசார் கோரியுள்ளனர்.

Wrestlers
மல்யுத்தம்

By

Published : Jun 12, 2023, 4:31 PM IST

டெல்லி:உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீராங்கனைகள், கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்தபோது, டெல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், டெல்லி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீச முயற்சித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் 15ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமித்ஷா உறுதியளித்ததையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.

அதன்படி, டெல்லி காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த பயிற்சியாளர்கள், நடுவர்கள் உள்ளிட்ட 230-க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல், குற்றம் சாட்டப்பட்ட மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுடன் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சர்வதேச மல்யுத்த நடுவர் ஜக்பிர் சிங் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதை நேரில் பார்த்தாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை, கஜகஸ்தான், மங்கோலியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மல்யுத்தக் கூட்டமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நாடுகளில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை தரும்படி டெல்லி காவல்துறை கோரியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீராங்கனைகளின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆதாரங்களை அந்நாடுகளிடம் டெல்லி போலீசார் கேட்டுள்ளனர்.

இதையும் படிங்க: wrestlers protest: மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை நேத்து தான் பார்த்தேன்.. பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. நடிகை நமிதா பேச்சால் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details