தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு.. இருவர் மீது திரும்புகிறதா விசாரணை?

Blast near Israeli Embassy: டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரு இளைஞர்கள் பக்கம் தற்போது போலீசார் விசாரணை திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Dec 27, 2023, 3:09 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ளது, இஸ்ரேல் தூதரகம். இந்த தூதரகத்திற்கு அருகே நேற்று (டிச.27) எதிர்பாராத வகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, உடனடியாக தகவல் அறிந்து வந்த டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நல்வாய்ப்பாக இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், டெல்லி காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் என்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னரும், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது.

சுதந்திர பாலஸ்தீனம் என்ற அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாததே, இந்த மோதல் இன்றளவும் தொடர்வதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த தொடர் மோதலின் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதலை நடத்தினர்.

இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நிகழ்த்தியது. இந்த தாக்குதல்களில், இரு நாடுகளும் பெருமளவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக பல உயிரிழப்புகள் அரங்கேறின.

இந்த நிலையில், நேற்று (டிச.27) டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இஸ்ரேல் தூதரகம் மற்றும் யூத நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகள், பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், டெல்லி மக்கள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புணர்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சாலையில், குண்டு வெடிப்பிற்கு முன்னர் இரண்டு இளைஞர்கள் நடந்து சென்றது கேமராவில் பதிவாகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவர்கள்தான் சந்தேக நபர்களா என்பது இன்னும் கண்டறியப்பட வில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்துல் கலாம் சாலை மற்றும் பிருத்விராஜ் சாலையின் வழித்தடங்களில் இருந்து, பல சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பு அமைப்புகள் சேகரித்துள்ளன. மேலும், சம்பவ இடத்திற்கு அருகே கடிதம் ஒன்று கிடைத்ததாக அதிகாரிகள் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த கடிதம் கைரேகைகளை சரிபார்க்க, தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும், இந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு பக்கக் கடிதம் எனவும் கூறப்படுகிறது. இந்த கடிதத்தைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு பின்னால் குறிப்பிட்ட சில அமைப்புகளின் தொடர்பு இருக்குமோ என சந்தேகிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடிதத்தில் சியோனிஸ்டுகள், பாலஸ்தீனம் மற்றும் காசா போன்ற வார்த்தைகள் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல் - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்!

ABOUT THE AUTHOR

...view details