டெல்லி : நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட கும்பலை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு பதிலாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதுவதாக எழுந்த புகாரில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், எய்ம்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவரை கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவருக்கு நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வில் முதலாம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மூன்று தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் நடந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.