டெல்லி:டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று (டிச.4) தேர்தல் நடைபெற்றது. இதில் 50 சதவீத வாக்குள் மட்டுமே பதிவாகின. இது கடந்த தேர்தல் வாக்குப்பதிவை விட குறைவாகும்.
மேலும் பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என ஆம் ஆத்மி மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக இருந்தாலும் நகராட்சி பதவிகளில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லியில் இந்த முறை காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.
முன்னதாக டெல்லியில் கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகள் ஆகியவை இருகட்சிகளுக்கும் இடையேயான பெரிய பிரச்சனையாக நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், மக்களின் அக்கறையின்மையாலும் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்க கூடும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 53 சதவீதம் வாக்குள் பதிவாகின.
அதிருப்தி:கழிவு மேலாண்மையில் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் டெல்லி வாக்காளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது மாநகராட்சி பதவியில் உள்ள பாஜக சிறப்பாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், ஆம் ஆத்மி மீதும் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இந்த நிலையில் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸிற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்: மக்களின் அதிருப்தியை தாண்டி தேர்தல் ஆணையம் மீதும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருந்ததால் பலர் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்காமல் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் அனில் குமார் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. ஆனால் என் மனைவி வாக்களித்துள்ளார்’ என தெரிவித்தார்.
தேர்தலை புறக்கணித்த மக்கள்:பவானாவின் கடேவாரா கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் காலியாக இருந்தன. மக்கள் அரசு அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி தேர்தலைப் புறக்கணித்தனர். இதனையடுத்து நங்கல் தக்ரான் வார்டில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
இது குறித்து கதேவாரா கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணா வாட்ஸ் என்ற வாக்காளர் கூறுகையில், " அரசும், அரசியல்வாதிகளும் இப்பகுதியில் வாழும் மக்களை புறக்கணிக்கிறது. இவர்களுக்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? முக்கியமான சாலைகள் பழுது அடைந்துள்ளன. நீர் வடிகால்கள் சரிவர செயல்படுத்தப்பட வில்லை. நகராட்சிகள் பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் உள்ளன” எனக் கூறினார்.
டெல்லியில் நகரின் முக்கியமான வாக்குசாவடிகளிலும், பதற்றம் நிறைந்த வாக்குசாவடிகளில் கண்காணிக்கும் பணியில் 60 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில் வாக்குப்பதிவின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் ஒருவொருக்கொருவர் குற்றம் சாட்டியது. இது குறித்து டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து பதிவு செய்யப்பட்ட ஆடியோக்களை வாக்குப்பதிவு நாளில் லட்சக்கணக்கான மக்களுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கடந்த 15 ஆண்டுகளாக நடந்த பாஜகவின் தவறான ஆட்சிக்கு மக்கள் தண்டனை அளிக்கப்போகிறார்கள் என கூறினார்.
கடந்த 2017 உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 270 வார்டுகளில் 181 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. வேட்பாளர்கள் இறந்ததால் இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சி 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. அந்த ஆண்டு வாக்கு சதவீதம் சுமார் 53 சதவீதமாக இருந்தது.
இதையும் படிங்க:குஜராத் சட்டசபை தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு