டெல்லி: தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை திருத்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து உள்ளதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில் சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்து டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை தற்போது அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆஜரான கவிதாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இருப்பினும் மார்ச் 16 ஆம் தேதி தன்னால் ஆஜராக இயலாது என எம்.எல்.சி கவிதா அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.