டெல்லி: 2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் "India: The Modi Question" என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி வெளியானது. இப்படத்தில், 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. வீடியோ உள்ளிட்டப் பல்வேறு ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் விளக்கப்பட்டிருந்தது.
இந்தப் படம் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பிரசாரம் செய்யும் வகையில் இந்த படம் இருப்பதாக பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், இந்த ஆவணப்படத்தில் நடந்த உண்மைகள் ஆதாரங்களுடன் கூறப்பட்டுள்ளதே தவிர புதிதாக ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இது தொடர்பான உள்ளடக்கங்கள் சமூக வலைதளங்களில் இருந்தும் அகற்றப்பட்டன. ஆனால், தடையை மீறி பல்வேறு அரசியல் கட்சிகள் இப்படத்தை பொதுவெளியில் திரையிட்ட சம்பவங்களும் நடந்தன.
இந்த ஆவணப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.